Saturday, September 13, 2008

ஆதி குரு ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி


ஸ்ரீ மஹா கணபதயே நம:
ஸ்ரீ குருப்யோ நம:

ஆன்மிகத்தில் ஈடுபடும் அனைத்து அன்பர்களுக்கும் குருவின் வழிகாட்டுதல் தேவை. தான் கந்தர் அனுபூதியின் இறுதிப் பாடலில் முருகப் பெருமானை 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்று இறைஞ்சுகிறார். மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை குரு மூர்த்தமாகவே தரிசித்து, திருவடி தீக்ஷைப் பெற்று ஞான நிலையில் திளைத்தார்.
இறைவனை தந்தை எனக்கொண்டால் குருவே நம் தாய். எவ்வாறெனில், ஒரு குழந்தை மலம் கழித்து தன மீது அதனை பூசிக் கொண்டு இருந்தால் எந்த தந்தையும் அக்குழந்தையினை சுத்தம் செய்யவோ, அள்ளிக் கொஞ்சவோ முன்வரமாட்டார். ஆனால் அன்னை அக்குழந்தையினை வாரி அணைத்து எடுத்து சென்று சுத்தம் செய்து, அலங்கரித்து, தந்தையிடம் எடுத்து செல்வார். அது போல்தான் தெய்வம் மும்மலத்தினால் சூழப்பட்டிருக்கும் நம்மை சேர்ப்பதில்லை. ஆனால் குரு தாய் போல் நாம் மாயை மற்றும் மும்மலத்தினால் சூழப்பட்டு இருந்தாலும் கூட நம்மை தூய்மைப்படுத்தி, தந்தையாகிய இறைவனிடம் நம்மை சேர்க்கின்றார்.
குரு நம்மை இறைவனுடன் இணைக்க விரும்புவதால், குருமார்கள் அனைவரும் ஆதி குருவும் தெய்வமாகவே இருக்கட்டும் என்று விரும்பினார்கள் போலும். அதனால் சிவபெருமானின் ஒரு தோற்றமாக தக்ஷிணாமூர்த்தியின் திருக் கோலத்தினை அமைத்தார்கள் என்றே கொள்ள வேண்டி உள்ளது.
பொதுவாக வயதில் இளையவர்கள் பெரியவர்களுக்கு உபதேசம் செய்யக் கூடாது. ஆனால், இங்கு உபதேசம் செய்யும் குரு இளம் வயதினராகவும். உபதேசம் கேட்கும் சீடர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனை ஒரு ஸ்லோகத்தில் இதைப் பற்றி குறிப்பிடப் படுகின்றது, குருவோ வயதில் இளையவர், சீடர்களோ முதியவர்கள், ஆச்சரியமான் காட்சி என்பதாக. இதன் மூலம் குரு எந்த வயதிலும் எந்த ரூபத்திலும் இருக்கலாம் என்பது தெரிய வருகிறது. தன்னை நாடி வரும் சீடர்கள் திருமண பந்தம் இல்லாதவர்களாக இருப்பதினால் இறைவனும் அவர்களுக்கு திருமணக் கோலம் காட்டாது, ஒரு பிரமச்சாரி போன்றே காட்சி தந்து உபதேசித்து அருள்கின்றார்.

ஒரு உபதேசம் என்பது, ரத்ன சுருக்கமாக இருக்க வேண்டும். வள வள என்று பேசினால் மனதில் பதியது என்று நினைத்தாரோ என்னவோ, மௌனமாக மாபெரும் ஞான உபதேசத்தினை சின்முத்திரை மூலமாகவே காட்டி அருள்கின்றார். ஆன்மாவானது, தனது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும் விடுத்து பரமான்வோடு இணைய வேண்டும் என்பதே சின்முத்திரையின் பொருள் என்று ஆன்றோர்கள் பகர்வார்கள்.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, சிவாலயங்களில் சிவ சந்நிதிக்கு வலப்புறம் (மேற்கு நோக்கிய சந்நிதி எனில் இடப்புறம்) தென் திசை நோக்கி அமர்ந்து அருளாட்சி புரிகின்றார். இவரின் திருமேனி கல் ஆல் மரத்தின் கீழ், வலக்கால் மீது இடக்காலினை இருத்தி, வலக்காலின் கீழ் முயலகன் என்னும் அறியாமையின் வடிவான அசுரனை மிதித்துக் கொண்டு, (ஏனெனில், ஞானம் இருக்குமிடத்தில் அக்ஞானம் இருக்க இயலாது அல்லவா?), கீழ் வலக்கரத்தில், ஞான முத்திரையாகிய சின் முத்திரையினைக் கொண்டு, கீழ் இடக்கரத்தில் வரி வடிவம் அடங்கிய ஞானத்தினை குறிக்கும் ஓலைச் சுவடியினையும், மேல் வலக்கரத்தில் நாத வடிவாகிய டமரு எனும் உடுக்கையினையும், மேல் இடக் கரத்தில் ஒளி வடிவாகிய ஞான அக்னியினையும் கொண்டு, அருட் காட்சித் தருகின்றார். ஞானம் என்பது, வரி வடிவிலும், ஒலியாகவும், ஒளியாகவும் நமக்கு கிடைக்கும் என்பதன் குறியீடு என்பதனைப் புரிந்து கொண்டால், ஞானம் நம்மை வந்து சேர இறைவனும், குருவும் அருள் புரிவார்கள்.
தக்ஷிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, வீணாதக்ஷிணாமூர்த்தி எனப் பல வடிவங்கள் காணப் படுகின்றன . தமிழகத்தில், ஆலங்குடி எனும் திருத்தலம் தக்ஷிணாமூர்த்திக்கு உரிய தலமாக போற்றப்படுகின்றது. (இம்மூர்த்தியினையும், நவ கிரஹங்களில் ஒன்றான குருவினையும் ஒன்றாகவே மக்கள் பார்க்கத் தொடங்கி விட்டனர். தக்ஷிணாமூர்த்தியும் பிரம்மாவும் நவ கிரக குருவின் அதிபதி ஆவர்) . நமது உடலினை ஒரு சிவாலயமாக பார்த்தல், வலது காது பகுதி தக்ஷிணாமூர்த்தியின் இருப்பிடமாகும். (வலச் செவியே குருவின் உபதேச மொழியினை பெற தகுதியானது என ஒரு கருத்தும் நிலவுகிறது. அது சரியா என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் விளக்கவும்)